Archives: ஜனவரி 2022

தயக்கமில்லா கண்ணீர்

“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.

நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.

அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.

நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப்  போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

பதில் கிடைக்காத ஜெபங்கள்

நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. எங்கள் பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபோது, வீட்டை அடையும் 16 மணி நேர பயணத்தில் நாங்கள் இப்படித்தான் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்தோம். எங்களின் மூத்த பிள்ளைகள் இருவரும் இந்த விளையாட்டை துடிப்புடன் விளையாடினர். அவர்கள் அந்த கேள்விகளை பலமுறை கேட்டுக்கொண்டேயிருந்தனர். நாம் அடைந்து விட்டோமா? என்ற இந்தக் கேள்வியை என்னுடைய குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பர். நானும் வாகனத்தை ஓட்டிக்கொண்டே “இல்லை” என்று அதே ஆர்வத்துடன் பதிலளிப்பேன். நாங்கள் இன்னும் வந்து சேரவில்லை, ஆனால் சீக்கிரத்தில் சேர்ந்துவிடுவோம் என்பதே பதில். 

உண்மை என்னவெனில், பெரியவர்கள் அந்த கேள்வியை சத்தமாய் சொல்லவில்லை என்றாலும் அந்த கேள்வியில் வேறு ஒரு மாற்று முறையை விரும்புகின்றனர். ஆனால் நாம் அதே காரணத்திற்காகத் தான் கேட்கிறோம். நாம் சோர்ந்துவிட்டோம், நம் கண்கள் குழிவிழுந்து போயிற்று (சங்கீதம் 6:7). ஒவ்வொரு நாளும் ஏற்படுகிற வாழ்க்கை பிரச்சனைகள், வேலை ஸ்தலத்தில் ஏற்படும் முடிவில்லா சோதனைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றால் நாம் பெருமூச்சி விட்டு இளைத்துப் போகிறோம் (வச. 6). நாம் அடைந்து விட்டோமா? இந்த பாடுகள் எது வரைக்கும் தேவனே? என்று நாம் கதறுகிறோம்.   

அந்த வகையான சோர்வை சங்கீதகாரன் நன்கு அறிந்து தேவனிடம் முக்கியமான கேள்வியை கேட்கிறார். அக்கறையுள்ள பெற்றோர் போல, தாவீதின் அழுகுரலைக் கேட்டு மிகுந்த இரக்கத்தால் ஏற்றுக்கொண்டார் (வச. 9). நாம் தேவனிடம் கேட்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை. கர்த்தருடைய சமுகத்தில், “எதுவரைக்கும் தேவனே?” என்று தைரியமாகக் கேட்கலாம். அவரோ “இன்னும் இல்லை, ஆனால் சீக்கிரத்தில் நடக்கும். நான் நல்ல தேவன், என்னை நம்புங்கள்" என்பார்.

கிறிஸ்துவைப் போல பரிபூரணராய்

காத்லீன் நாரிஸ் என்னும் எழுத்தாளர், “பரிபூரண வாதம் (Perfectionism) என்பது எனக்குத் தெரிந்த வார்த்தைகளிலேயே பயங்கரமான ஒரு வார்த்தை,” என்கிறார். அவர் நவீன காலத்து பரிபூரண வாதத்தையும், மத்தேயுவில் விளக்கியுள்ள பரிபூரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார். நவீன காலத்து பரிபூரண வாதம் என்பது ஒரு தீவிர உளவியல் துன்பம். அது மக்களை எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவிடாமல் தடுக்கிறது என்கிறார். ஆனால் மத்தேயுவில் வரும் பூரணம் என்பது “முதிர்ந்த” அல்லது “முழுமையான” என்று பொருள்படுகிறது. “பரிபூரணம் என்பது வளர்ச்சிக்கு இடம் தந்து, முதிர்ச்சியடைந்தவர்களாய் மற்றவர்களுக்கு நம்மையே தருவதாகும்” என்று நாரிஸ் குறிப்பிடுகிறார். 

பரிபூரணம் என்பதை இந்த வழியில் புரிந்துகொள்ள மத்தேயுவில் ஒரு ஆழமான கதை இருக்கிறது. மத்தேயு 19ல் இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (வச. 16). இயேசு பதிலுக்கு “கற்பனைகளைக் கைக்கொள்” என்கிறார் (வச. 17). இதையெல்லாம் கைகொண்டிருக்கிறேனே இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்று அந்த மனிதன் கேட்கிறான் (வச. 20). 

அப்பொழுது அந்த மனிதனின் ஐசுவரியம் தான் அவன் மனதைப் பற்றியிருக்கும் பிடி என்பதை இயேசு உணர்ந்துகொண்டார். எனவே இயேசு, “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார் (வச. 21). 

நாம் ஒவ்வொருவரும் பரிபூரணத்திற்கு அவரவருக்கு சாதகமான விளக்கத்தை வைத்திருக்கிறோம். நாம் பற்றியிருக்கும் ஆஸ்திகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் முயற்சி பயனற்றது. இன்று இயேசுவின் மென்மையான அழைப்பைக் கேட்டு உங்களை ஒப்படையுங்கள், பரிபூரணத்தில் விடுதலையடையுங்கள், அது தேவனால் மட்டுமே கூடும் (வச. 26).

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.